சென்னை: தமிழகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு போராட்டங்களில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக ‘ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பு அறிவித்துள்ளதாக தினமலர் ஊடகம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்; சரண் விடுப்பு என்றழைக்கப்படும் ஊழியர்கள் விட்டுக்கொடுக்கும் விடுப்புக்கான சலுகையை மீண்டும் வழங்கவேண்டும் ஆகியவை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்திவருகின்றனர். ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கு ஆணையர்கள் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.
சரண் விடுப்பு சலுகை, 2026ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் வழங்கப்படும் என வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
சட்டமன்ற வரவுசெலவுக் கூட்டம் நடந்துவரும் நிலையில், போராட்டத்தைத் தீவிரப்படுத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதையறிந்த அரசு, போராட்டத்தை முடக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என, தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவைப் பின்பற்றும்படி அனைத்துத் துறை செயலர்கள், துறைத் தலைவர்கள், ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் போராட்ட உத்தியை மாற்றிக்கொண்டுள்ளனர்.
அதன்படி, அரசு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அரசு ஊழியர், ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பான ‘ஜாக்டோ - ஜியோ’ வாயிலாக மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

