7ஆம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை; சக மாணவர்கள் இருவர் கைது

7ஆம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை; சக மாணவர்கள் இருவர் கைது

2 mins read
3fcadae0-c2dc-4c04-8b3e-5d9278109d0a
கொலை செய்யப்பட்ட சிறுவன் குமணன். - படம்: தினமணி
multi-img1 of 2

கோவை: கோவை இருகூர் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 13 வயதுப் பள்ளி மாணவனை, அவனது நண்பர்களான சக மாணவர்கள் இருவர் போத்தலால் அடித்துக் கொன்று குழிதோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இருகூர் பகுதியைச் சேர்ந்த பாரதிராஜாவின் 13 வயது மகன் குமணன் (உண்மைப் பெயரல்ல), ஆர்.ஜி. புதூர் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.

கோடை விடுமுறையை முன்னிட்டு, கடந்த 15ஆம் தேதி பிற்பகல் இருகூர் வாய்க்காலுக்குத் தனது நண்பர்களுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளான்.

அப்போது சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதத்தை அடுத்து ஆத்திரமடைந்த இரு சிறுவர்கள், அங்கிருந்த காலி மதுபோத்தலால் அந்த மாணவனின் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இதனால் பயந்துபோன அச்சிறுவர்கள், தாங்கள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க உடலை அங்கேயே ரகசியமாகக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

மாணவன் நீண்ட நேரமாகியும் இரவில் வீடு திரும்பாததால் பெற்றோர் விசாரித்தபோது, “அவன் யாரோ ஒருவருடன் தனியாகச் சென்றான்,” என நண்பர்கள் மழுப்பியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவலர்கள் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் சிறுவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர்.

அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், திங்கட்கிழமை (மே 18) காலை சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினரும் வருவாய்த்துறையினரும் புதைக்கப்பட்ட மாணவனின் உடலைத் தோண்டி எடுத்து, உடற்கூராய்வுக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விளையாடச் சென்ற இடத்தில் மாணவன் சக நண்பர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்