சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையிலும், எந்த இடத்திலும் சீரான மழைப்பொழிவு இல்லை. மாறாக, பகலில் அதிக வெப்பமும் மாலை மற்றும் இரவு வேளைகளில் குளிரும் நிலவுவதோடு அவ்வப்போது மழையும் பெய்கிறது.
நிலையற்ற பருவநிலை காரணமாக, வழக்கமாக கோடைக்காலத்தில் காணப்படும் நோய்கள் தற்போது பரவி வருகின்றன.
தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற வெப்பகால கிருமிப் பாதிப்புகள் மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன.
மற்றொருபுறம் டெங்கி, சிக்குன்குனியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களும் தீவிரமடைந்துள்ளன.
முக்கியமாக டெங்கிக் காய்ச்சலுக்கு மட்டும் இவ்வாண்டு 21,000க்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பருவகால மாற்றத்தின் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுப் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
குறிப்பாக, காய்ச்சலுக்காக மருத்துவமனைகளை நாடும் குழந்தைகளில் 40 விழுக்காட்டினருக்கு டெங்கி உறுதி செய்யப்படுவதாகக் கூறியுள்ளனா்.
மேலும், தமிழகம் முழுவதும் தற்போது வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் 3 நாட்களில் குணமடைந்து விடுகிறார்கள். ஆனால் சிலருக்கு இருமல், உடல் வலி, சோர்வு ஆகியவை ஒரு மாதம் வரை நீடிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இதில் 75 விழுக்காட்டினருக்கு இன்புளூயன்சா வைரஸ் காரணமாக காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பலருக்கு இன்புளூயன்சா ஏ வைரஸ் காரணமாகவும், சிலருக்கு இன்புளூயன்சா பி வைரஸ் காரணமாகவும் காய்ச்சல் பரவி உள்ளது. இன்னும் சிலருக்கு டெங்கு காய்ச்சலும் பரவி இருப்பது தெரியவந்து உள்ளது.
இதன் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சிலருக்கு அடினோவைரஸ், சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் பிற வைரஸ் தொற்றுகளும் பரவி இருப்பதை மாநில பொது சுகாதார ஆய்வகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பெரும்பாலானவர்கள் தொற்று நோய் அறிகுறிகளுக்கு மருந்து சாப்பிடாததால் தீவிர பாதிப்பு ஏற்படுகிறது. முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவா்களிடையே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் அவர்களில் பலருக்கு ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படுவதாகவும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர் விஸ்வநாதன் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “பொதுமக்கள் இது குறித்து விழிப்புணா்வுடன் இருந்தால் தொற்றுகளைத் தவிா்க்கலாம். தேவையில்லாமல் நோய் எதிர்ப்பு மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது.
“டைஃபாய்டு, நிமோனியாவைத் தவிர தற்போது பரவும் எந்தவிதமான காய்ச்சலுக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகள் தேவையில்லை. இரு நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவா்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
“தனிநபா் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. மருத்துவா்கள், சுகாதாரத் துறை வழங்கும் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தால் இந்த தொற்றுகளிலிருந்து விடுபடலாம்,” என்றாா்.

