சென்னை: சென்னையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 21) நடந்த தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.17,616 மதிப்பிலான 19 முடிவுற்ற திட்டங்களைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும் ரூ.51,157 கோடி மதிப்பிலான 28 திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
இவற்றின்மூலம், கிட்டத்தட்ட 106,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று திரு ஸ்டாலின் குறிப்பிட்டார்.
புதிய முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அவ்வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் இவ்வாண்டு ஜனவரி 7, 8 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது, தமிழகத்தில் ரூ.664,180 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2,690,657 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை நடந்த தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், “கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.9.94 லட்சம் கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளன. ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க ஆதரவுச் சேவைகள் அளித்து வருகிறோம். முன்னேற்றத்தை கண்காணித்து, திட்டங்கள் தொடர்ந்து செயலாக்கப்படுவதையும் அரசு உறுதிசெய்து வருகிறது,” என்றார்.
தமிழகத்தில் நிம்மதியாக தொழில் நடத்தலாம் என்பதால்தான், கடந்த மூவாண்டுகளில் அதிகளவிலான தொழில் நிறுவனங்கள் இங்கு வந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
தொழில் தொடங்கியுள்ள தொழிலதிபர்கள் தங்களுக்கு தெரிந்த நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும்படி அழைப்பு விடுக்குமாறும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்டங்கள் வளர்ச்சி, தமிழ்நாட்டில் பரவலான மற்றும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதை உறுதிசெய்வதே தமிழக அரசின் நோக்கம் என்றும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, மேலும் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் திரு ஸ்டாலின் இம்மாதம் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர் அங்கு 17 நாள்கள் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.