சென்னை: தமிழகம் முழுவதும் கரும்பு, அரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமையன்று (ஜனவரி 9) காலை தொடங்கிவைத்தார்.
அரிசி மட்டும் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தையும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு தன் கைப்பட வழங்கியதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பொங்கலோ பொங்கல்’ என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. தமிழர் தம் ஊனோடு, உயிரோடு, உணர்வோடு கலந்த விழாவாக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு இலவச வேட்டி, சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இரு திட்டங்களையும் தொடங்கி வைத்தார் என்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் மூலம் 249.76 கோடி ரூபாய் செலவில் 22,094,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள் என்றும் அரசு செய்திக்குறிப்பு தெரிவித்தது.
இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் 1.77 கோடி வேட்டி, சேலைகள் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும்.
இதற்கிடையே, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அங்கு அரசின் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்படவில்லை.
இதனால் அத்தொகுதி மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.