சென்னை: ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதி விரிவாக்கம், ஆய்வு மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை சென்னையில் நிறுவ உள்ளது.
ரூ. 200 கோடி முதலீட்டில், 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செப்டம்பர் 3ஆம் தேதி சிகாகோ நகரில் கையெழுத்தானது.
அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம் சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
முன்னதாக சான்பிரான்சிஸ்கோவில் எட்டு நிறுவனங்களுடன் ரூ.1,300 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர், அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஆகஸ்ட் 30ஆம் தேதி கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், 31 ஆம் தேதி ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.
ஈட்டன்
ஈட்டன் கார்ப்பரேஷன் நிறுவனம் என்பது தரவு மையம், பயன்பாடு, தொழில்துறை, வணிகம், இயந்திரக் கட்டடம், குடியிருப்பு, விண்வெளி, இயக்க சந்தைகளுக்கான உற்பத்தி, பகிர்மான பணிகளை மேற்கொள்ளும் மேலாண்மை நிறுவனமாகும்.
இந்நிறுவனத்தின் தலைமையகங்கள் அயர்லாந்தின் டப்ளின், அமெரிக்காவின் ஓஹியோவின் பீச்வுட் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. உலகளவில் 35 நாடுகளில் கிட்டத்தட்ட 208 இடங்களில் உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அஷ்யூரன்ட்
அஷ்யூரன்ட் நிறுவனம் பார்ச்சூன் 500 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும், இந்நிறுவனம் அட்லாண்டாவை தலைமையிடமாக கொண்டு இடர் மேலாண்மை தயாரிப்புகள், சேவைகளை வழங்கி வருகிறது.