கடலோர காவல்படை சார்பில் மெரினாவில் தூய்மைப் பணி: 450 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

கடலோர காவல்படை சார்பில் மெரினாவில் தூய்மைப் பணி: 450 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

1 mins read
672d9472-c70d-44cc-a08c-4d4f61027ca3
இந்நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவற்படையின் கிழக்கு வட்டார ஐஜி டோனி மைக்கேல் பங்கேற்று, கடலோர தூய்மைப் பணியைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: இந்திய கடலோர காவற்படை சார்பில் சனிக்கிழமை (செப். 21) மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணியில் 450 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

அனைத்துலக கடலோரத் தூய்மை தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 3வது சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் கடற்கரைகளைச் சுத்தம் செய்ய மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகின் பெருங்கடல்கள் மற்றும் நீர்வழிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சியில் இந்திய கடலோரக் காவற்படையின் கிழக்கு வட்டார ஐஜி டோனி மைக்கேல் பங்கேற்று, கடலோர தூய்மைப் பணியைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “கடலோர சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, மனித நலனுக்கு மிகவும் நன்மை பயக்கும் செயலாகும். நுண் பிளாஸ்டிக் பொருள்களைக் கடலில் கொண்டு போய் சேர்ப்பது கடல் சுற்றுச்சூழலைப் பாதிக்கும். பொதுமக்கள் முயற்சித்தால், இதை தடுக்க முடியும். இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் இதுபோன்ற கடலோர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்றார்.

இந்தத் தூய்மைப்பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தேசிய மாணவர் படையினர், மத்திய, மாநில அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட 900 பேர் பங்கேற்று மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றினர். இப்பணியில் மொத்தம் 450 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. அவை மாநகராட்சி மூலமாக முறையாக அப்புறப்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்