திருமண விருந்தில் தேங்காய் வடிவ இருக்கைகள்

1 mins read
efc503be-f060-4328-88bf-3bd782846516
பொள்ளாச்சியில் அண்மையில் நடைபெற்ற திருமணத்தில் விருந்து பரிமாறும் அரங்கில் தேங்காய் வடிவ இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. - படம்: இந்திய ஊடகம்

பொள்ளாச்சி: இல்லறத்தில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் தங்கள் வாழ்வின் முக்கிய அங்கமான திருமண நிகழ்ச்சி தங்களுக்கு மட்டுமன்றி மற்றவர்களுக்கும் நினைவில் நிற்கக்கூடியதாய் அமையவேண்டும் என்று கருதுவது இயல்பு.

அதற்காகப் புத்தாக்க நடவடிக்கைகளில் அவர்கள் கவனம் செலுத்தும் போக்கு அண்மையில் அதிகரித்துவருகிறது.

சிலர் நடுக்கடலிலும் நடுவானிலும் கூட திருமணத்தை நடத்துவதை நாம் கேள்விப்பட்டதுண்டு.

திருமண விழாக்களில் தங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி மண மேடை, உணவு அரங்கு உள்ளிட்டவற்றை அமைத்துக்கொள்கின்றனர்.

அப்படி ஒரு திருமண விழா, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அண்மையில் நடைபெற்றது.

திருமணத்திற்கு வந்தவர்களுக்குச் சுவையான உணவு பரிமாறப்பட்டது. அதில்தான் திருமண வீட்டார் புதுமையான ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.

வழக்கமாக விருந்து பரிமாறும் அரங்கில் உணவு மேசை, நாற்காலிகள்தான் போடப்படும். ஆனால், பொள்ளாச்சி தென்னை நகரம் என்பதால் தேங்காய் வடிவில் இருக்கைகளை அமைத்திருந்தனர்.

திருமணத்திற்கு வந்தவர்கள் வியப்பு கலந்த மகிழ்ச்சியுடன் அந்த இருக்கைகளில் அமர்ந்து விருந்துண்டனர். அந்த இருக்கைகளைத் தங்கள் கைப்பேசியில் புகைப்படம், காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

அத்தகைய ஒரு காணொளி இணையத்தில் பரவிவருகிறது. இது தேங்காய் வர்த்தகர் வீட்டுத் திருமணம் என்று எக்ஸ் தளத்தில் வெளியான அந்தக் காணொளிப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்