கோவை: பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டட வேலைகள் நடைபெறும் பகுதியில் இன்று சிறுத்தை நடமாடியதாக காட்டுவளத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பல்கலைக்கழகம் அளித்த தகவலின் அடிப்படையில், அங்கு வந்த காட்டுவளத் துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிறுத்தையின் நடமாட்டத்தை அவர்கள் உறுதி செய்தனர். அதன் பின், அங்குப் பல இடங்களில் கண்காணிப்புக் காணொளிக் கருவிகள் பொருத்தி, பின்னர் கூண்டுகளை வைத்துச் சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறுத்தை பிடிபடும் வரை மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வளாகத்திற்குள் நடமாடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், பல்கலைக்கழகத்தின் அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது மாணவர்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.