தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளிப் பண்டங்களில் அதிக அளவு நிறமிகளைச் சேர்த்தால் கடும் நடவடிக்கை

2 mins read
4b3497c0-84b0-4eb8-8685-5cfcd9e4ff54
கோயம்புத்தூரில் தயாரிக்கப்படும் தீபாவளிப் பலகாரங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் நிறமிகளைச் சேர்த்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கோயம்புத்தூர் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி எச்சரிக்கை விடுத்துள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் தீபாவளிக்கு விற்பனையாகும் பண்டங்களில் அளவுக்கு மீறி நிறமிகள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர், உணவுத் தயாரிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோயம்புத்தூர் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இதுகுறித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையத்தின் உத்தரவின்படி, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பவர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இனிப்பு, கார பண்டங்களைத் தயாரிக்க அனுமதிக்கப்பட்ட கலர் நிறமிகள், அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், சூடான உணவுப் பொருட்களை நெகிழித் தாளில் பொட்டலம் கட்டக் கூடாது. மேலும், பண்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள சேர்மானங்கள் குறித்த விவரங்களும் தெளிவாக இருக்க வேண்டும்.

முக்கியமாகத் தயாரிப்பாளர்களும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

விதிமுறைகள் மீறியது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டம் 2006ன் படி அபராதம் விதிக்கப்படும் என்று அவர் அந்தச் செய்திக் குறிப்பில் உணவுத் தயாரிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் தீபாவளியை முன்னிட்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 104 இடங்களில் நடத்திய அதிரடிச் சோதனையில், கிட்டத்தட்ட 501 கிலோ இனிப்புகளில் அளவுக்கு அதிகமான நிறமிகள் சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதனையடுதது அந்த இனிப்புப் பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்