சென்னை: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை பாஜக அரசு முடக்கிவிட்டதாக தமிழக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
மத்திய அரசின் இப்போக்கைக் கண்டித்து அவ்விரு நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக அக்கட்சிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிதிப் பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியைக் கூட ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசு தற்போது கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் முடக்கி வஞ்சித்துள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போதுமான மக்கள் தொகை இல்லாததைச் சுட்டிக்காட்டி மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரு நகரிலும் மக்கள் தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சு கூறியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவையில் 15.84 லட்சம் மக்களும், மதுரையில் 15 லட்சம் மக்களும் வசிப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, “கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக பழிவாங்கும் கீழ்மையான போக்கு,” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார்.


