நூலகம், அறிவியல் கட்டமைப்புகளுடன் கோவை ‘பெரியார் அறிவுலகம்’

நூலகம், அறிவியல் கட்டமைப்புகளுடன் கோவை ‘பெரியார் அறிவுலகம்’

கோவையின் புதிய சின்னமாக உருவாகியுள்ள அறிவியல் மையம், எட்டுத் தளங்களில் பல வசதிகளைக் கொண்டுள்ளது.
1 of 2
படம்: தி இந்து
படம்:ஏடபிள்யுஏஎஸ்

16 Oct 2026 - 9:21 pm

2 mins read

கோவை: கோவை காந்திபுரத்தில் ரூ.301 கோடி செலவில் மிகப் பெரிய அளவில் நூலகம், அறிவியல் மையத்துடன் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) திறந்து வைத்தார்.

சிறைத்துறைக்குச் சொந்தமான 6.98 ஏக்கர் பரப்பளவில் எட்டுத் தளங்களுடன் 1.98 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள மையம் ‘ஏ’, ‘பி’ என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ல் திமுக ஆட்சியில் பெரியார் அறிவுலகக் கட்டடப் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

ஏறக்குறைய 100,000 நூல்களைக் கொண்ட நூலகம், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி நூலகம், தமிழ், ஆங்கிலம், வரலாற்று நூல்கள் பிரிவுகள், ஆய்வுப் படிப்பகங்கள், குழந்தைகள் நூலகம் என ஒவ்வொரு தளத்திலும் நூலகம், அறிவியல் சார்ந்த வசதிகள் தகுந்த முறையில் பிரித்து அமைக்கப்பட்டுள்ளன.

350 பேர் அமரக்கூடிய அரங்கம், அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம், விண்வெளியைக் கண்டுகளிக்கும் வகையில் கோளரங்கம், போட்டித் தேர்வு பயிற்சி மையம், மின்னிலக்க நூலகம், தொழில்முனைவோருக்கான மையம் போன்ற பல்வேறு நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையையும் முதல்வர் விஜய் திறந்துவைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, கோவையில் ரூ.408 கோடி மதிப்பிலான 89 முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளைப் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்த திரு விஜய், ரூ.32.32 கோடி மதிப்பில் 144 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், 9,343 பயனாளிகளுக்கு ரூ.34.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளின் இருக்கைக்கே நேரில் சென்று நவீன செயற்கைக் கால்கள், உதவிகளை வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுகோயம்புத்தூர்அறிவியல்நூலகம்பெரியார்சாங்கி விமான நிலையம்திறப்புவிழாவிஜய்