கோவை: சிறைச்சாலைகள் தங்களுக்குத் திருந்தி வாழ வாய்ப்பளிக்கும் நற்சாலைகள் என்பதைக் கோவை மத்திய சிறைக்கைதிகள் மெய்ப்பித்து வருகின்றனர்.
விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், குண்டர் சட்டத் தடுப்புக் கைதிகள், உயர் பாதுகாப்புப் பிரிவுக் கைதிகள் என 1,500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தொழிலையும் கல்வியையும் கற்றுத் தருவதற்கு சிறைத்துறை நிர்வாகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே கோவை மத்திய சிறையில் கல்வி கற்கும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன், அவர்கள் அனைவருமே பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, சாதித்து வருகின்றனர்.
இதுபற்றிக் கூறிய கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார், “கைதிகளின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக, அவர்களுக்குக் கல்வியறிவு புகட்டுவதை முக்கியமானதாகக் கருதுகிறோம். அடிப்படைக் கல்வி முதல் உயர்நிலை, மேல்நிலை, இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்புவரை கற்பிக்கப்படுகிறது. அதற்கு பாரதியார் பல்கலைக்கழகமும் திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களும் நல்ல ஒத்துழைப்பு அளிக்கின்றன,” என்றார்.
இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்பில் 23 பேர், பதினொன்றாம் வகுப்பில் 22 பேர், பத்தாம் வகுப்பில் 44 பேர் எனப் பொதுத் தேர்வு எழுதிய கோவை மத்திய சிறைக்கைதிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கு வகுப்பெடுப்பதற்காக தலைமை ஆசிரியர் ஒருவரும் ஆசிரியர்கள் ஐவரும் உள்ளனர் என்றும் 350க்கும் மேற்பட்ட கைதிகள் அங்குள்ள கல்விக்கூடத்தில் பயில்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

