கோவை: கோயம்புத்தூர் அனைத்துலக விமான நிலையத்திற்குப் பின்னால் உள்ள பிருந்தாவன் நகரில் 20 வயது மாணவி மூன்று பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியினர் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று குறை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் மூன்று ஆடவர்களைக் கைது செய்ததாக தமிழக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
குணா தவசி, சதீஷ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகியோரை அதிகாரிகள் சுட்டுப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
துடியலூர் அருகே அவர்கள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
காவல்துறையினர் அவர்களை நெருங்கியபோது, மறைத்துவைத்திருந்த அரிவாளால் தாக்கத் தொடங்கியதாகவும் அதில் தலைமை காவலர் சந்திரசேகரின் இடதுகை மணிக்கட்டில் வெட்டு விழுந்ததாகவும் கூறப்பட்டது.
காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற அவர்களை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.
காலில் குண்டு பாய்ந்த மூன்று சந்தேக நபர்களும் கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினரைத் துரிதமாகச் செயல்பட கேட்டுகொண்டதாகவும் அவர் தமது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதிமுக, பாஜக ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே, சம்பவம் நடந்த இடத்தை பாஜக தேசிய மகளிரணித் தலைவியும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நவம்பர் 3ஆம் தேதி நேரில் ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து கோவை தெற்கு தாலுகா ஆட்சியர் அலுவலகம் அருகே வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைகளில் பெப்பர் தெளிப்பான், தீப்பந்தம் ஏந்தி பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், திமுக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகில் சட்டவிரோதமாக மதுபானக் கூடம் ஒன்று இயங்கி வந்ததாகக் கூறப்பட்டது.
அதை நாம் தமிழர் கட்சியினர் அடித்து நொறுக்கி, ஒருவரை பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், கோவை செஞ்சிலுவைச் சங்கம் அருகில் அதிமுக மகளிர் அணி சார்பில் நவம்பர் 4ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

