சென்னை: இந்தத் தேர்தலில் திமுகவின் கோட்டையாக கோவை வலிமை பெறும் என்று தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 18) நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
மேட்டுப்பாளையம், உதகை, கூடலூா், குன்னூா், கவுண்டம்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூா் ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தக் கூட்டத்தில் பிரசாரம் செய்தார் அவர்.
அதனைத் தொடர்ந்து, தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “2026 தேர்தலில் திமுகவின் கோட்டையாக கோவை வலிமை பெறும். நீலகிரி மாவட்டத்திலும் அதிமுக-பாஜகவின் என்டிஏ கூட்டணி நினைத்துப் பார்க்காத முடியாத வித்தியாசத்தில் தோல்வியுறும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை என பத்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் அதிமுக, பாஜக ஆதரவு நிலவுவது வழக்கம். அதனை இம்முறை முறியடிக்க திமுக முயன்று வருகிறது.
மு.க. ஸ்டாலின் தமது பதிவில் மேலும் குறிப்பிடுகையில், “கோவையில் பேசிய பிரதமர் மோடி ‘டபுள் எஞ்சின்’ அரசு இருந்தால்தான் வேலைகள் விரைவாக நடக்கும் என்று கூறியுள்ளார். உங்கள் வேகம் எப்படி இருக்கும் என மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்த்தே தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்திருப்பார்கள். தங்களின் வருகைக்கு நன்றி. அடுத்ததாக, அடுத்த தேர்தல் பருவத்தில் சந்திப்போம்.
“கறுப்புச் சட்டை அணிந்து கறுப்புக் கொடி ஏற்றினால் தொகுதி மறுவரையறை நின்றுவிடுமா?,” எனக் கேட்டுச் சிரித்த பழனிசாமி கும்பலைப் பார்த்து இன்றைக்கு இந்தியாவே சிரிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“பழனிசாமி அவர்களே, இனி பாஜகவின் சட்டங்களுக்கு முட்டுக் கொடுக்கும்போது முந்திரிக்கொட்டைபோல முந்திக் கொள்ளாதீர்கள்.
“பொறுத்திருந்து பார்த்து, பக்குவமாக முட்டுக் கொடுங்கள். இல்லையென்றால் இப்படித்தான் மூக்குடைபடுவீர்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

