படிப்பைக் கைவிட்ட 51 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்துவிட்ட ஆட்சியருக்குப் பாராட்டு

2 mins read
f45de6ec-11be-4487-9f54-2ba2af42df36
மாணவர்களின் கையைப் பிடித்து பள்ளிக்கு அழைத்துச் சென்ற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். - படம்: தமிழக ஊடகம்
multi-img1 of 2

திருவண்ணாமலை: பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து படிக்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டுச் சென்ற 51 மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்துவிட்டார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.

ஆட்சியரின் இந்த நற்செயலைக் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், அய்யம்பாளையம் புதூர் பகுதி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் பிள்ளைகளில் சிலர் வறுமை, குடும்பச் சூழ்நிலை மோசமாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால் பள்ளிப் படிப்பைத் தொடராமல் பாதியிலேயே நிறுத்தி உள்ளனர்.

இதுகுறித்த தகவல் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவ, மாணவிகளைக் கண்டறியும் பணி தொடங்கியது.

இதன்படி படிப்பை பாதியில் நிறுத்திய 51 மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் அய்யம்பாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆட்சியர் சேர்த்துவிட்டார்.

அவர்களுக்கு புத்தகப் பை, சீருடை உள்ளிட்டவற்றை வழங்கவும் ஆட்சியர் ஏற்பாடுகளைச் செய்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், “படிப்பை நிறுத்திய 51 மாணவர்களும் தொடர்ந்து பள்ளிக்கு வருகிறார்களா என்பது குறித்து நாள்தோறும் ஆய்வு நடத்தப்படும். மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

“தற்போது பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

“இம்மாத இறுதிக்குள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி செல்லா மாணவர்களையும் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களையும் கண்டறிந்து மீண்டும் அவர்களைப் பள்ளியில் சேர்க்கும் பணி நிறைவடையும்,” எனத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்