தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

72 வயது மாணவரால் களைகட்டும் கல்லூரி

1 mins read
9672ee7f-6fca-4cda-8cf8-4e4db4677837
வகுப்பறையில் செல்வமணி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

கடலூர்: வடலூர் பகுதியைச் சேர்ந்த 72 வயதான செல்வமணி என்ற முதியவர், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

எம்.காம்., எம்பிஏ., எனப் பட்ட மேற்படிப்புகளை முடித்திருந்தாலும், படிப்பு மீதான இவரது ஆர்வம் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. இத்தனைக்கும் செல்வமணி பணி ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.

உடல் சற்றே தளர்ந்து போயிருந்தாலும், மனத்தில் கல்வி மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததாகக் குறிப்பிடும் செல்வமணி, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

தன்னை நம்பியுள்ள மனைவிக்காக நாள்தோறும் அனைத்து வீட்டு வேலைகளையும் தாமே செய்கிறார். பிறகு மற்ற மாணவர்களைப் போல புத்தகப் பையுடன் குறித்த நேரத்திற்கு கல்லூரிக்கு வருகை தரும் செல்வமணியைப் பார்த்து அனைவரும் வியந்து போகிறார்கள்.

வகுப்பறையில் தமக்குத் தெரியாத விவரங்களை ஆசிரியர்களிடம் தயக்கமின்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் இவர், தமக்குத் தெரிந்தவற்றை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவும் தயங்குவதில்லை.

சிறந்த முன்மாதிரியாக விளங்கும் செல்வமணியை ‘தாத்தா’ என சக மாணவர்கள் வாஞ்சையுடன் அழைக்க, அவரும் பேரப் பிள்ளைகளுடன் பழகுவதுபோல் உற்சாகமாகப் பேசிப் பழகுகிறார்.

இந்த 72 வயதான மாணவரால் கல்லூரி வளாகம் எங்கும் உற்சாகம் நிறைந்திருப்பதாகக் கல்லூரி நிர்வாகம் சொல்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்