கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: மூவருக்கு வாழ்நாள் சிறை

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: மூவருக்கு வாழ்நாள் சிறை

2 mins read
ef5bb969-5d68-417a-86c8-eb4460f15b0f
தண்டனை பெற்றவர்களில் கருப்புசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. - படம்: இந்து தமிழ் திசை

கோயம்புத்தூர்: கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டப்பிரிவுகளுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் பி.ஜிஷா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் மதுரையைச் சேர்ந்தவர். 21 வயதான அந்த மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி இரவு மாணவியும் அவரது நண்பரும் கோவை பீளமேடு விமான நிலையத்தின் பின்புறம் உள்ள திறந்தவெளியில் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 25 வயதான அந்த நண்பர் கோவையில் ஆட்டோ மொபைல் கடத்தி வருகிறார்.

இந்நிலையில், திடீரென அங்கு வந்த மூன்று பேர் காரில் இருந்து இறங்குமாறு மாணவியையும் அவரது நண்பரையும் மிரட்டி உள்ளனர். பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இளையர் சரமாரியாகத் தாக்கப்பட்டார்.

அதன் பிறகு மூன்று பேரும் மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர். இதையடுத்து அவர்கள் தப்பியோடிய நிலையில், மாணவி அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இவ்வழக்கில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தீவிர தேடுதல் வேட்டையின்போது மாணவியை சீரழித்தவர்கள் கோவை, வெள்ளக்கிணறு அருகே இருப்பதை அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் மூவரையும் சுட்டுப்பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு தமிழகம் முழுவதும் பேசுபொருளானது.

இதையடுத்து நடந்த அடுத்தக்கட்ட விசாரணையில் மூவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி, கார்த்திக் என்ற காளீஸ்வரன், மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்ற தவசி எனத் தெரியவந்தது.

இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது 72 பேர் சாட்சியம் அளித்தனர். விரைவாக வழக்கை முடித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கூறிய நிலையில், நான்கு மாதங்களில் வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சுந்தரராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, குற்றவாளிகள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஏழு லட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகையாக வழங்கவும் காயமடைந்த அவரது நண்பருக்கு ரூ.2 லட்சமும் வழங்க நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தண்டனை பெற்றவர்களில் கருப்புசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வன்கொடுமை குறித்து துணிச்சலுடன புகார் அளித்த மாணவியையும் விசாரணையை விரைவில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த காவல்துறையையும் சமூக ஊடகங்களில் ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்