நீதிமன்றத்துக்கு வாருங்கள்: ராமதாஸ், அன்புமணிக்கு நீதிபதி வேண்டுகோள்

2 mins read
8eeb4e28-62b3-4a0c-b03f-1cce20d4e526
ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: பாமக உட்கட்சிப்பூசல் தொடர்பான வழக்கை விசாரிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகிய இருவரையும் நீதிமன்றத்துக்கு வந்து தம்மைச் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பாமக பொதுக் குழுக்கூட்டம் அன்புமணி தலைமையில் நடைபெறும் என அவரது தரப்பினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், அன்புமணியின் கட்சித் தலைவர் பதவி கடந்த மே மாதம் 28ஆம் தேதியே நிறைவடைந்துவிட்டது என்றும் அவர் கூட்டும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, ராமதாஸ் தரப்பிடம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதை அவசர வழக்காகக் கருதி, உடனடியாக விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒப்புக்கொண்டார். அதன்படி, வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெற்றது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட அவர், தம்மால் ஐந்து நிமிடங்களில் இந்த வழக்கை முடித்துவிட இயலும் என்றாலும் இருதரப்பு நலனையும் கருத வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

“ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அன்புமணி, ராமதாஸ் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் உள்ள தமது அறைக்கு அழைத்து வருமாறு கேட்டுக்கொண்டார்.

தாம் தனித்தனியாக இருவரிடமும் பேச விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், இதை இருவருக்கும் வேண்டுகோளாக முன்வைத்ததாகத் தெரிவித்தார்.

இதை ஏற்று அன்புமணி நீதிபதியைச் சந்திப்பார் எனத் தகவல் வெளியான நிலையில், உடல்நலக் குறைவால் மருத்துவர் ராமதாஸ் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) நீதிபதியைச் சந்திக்கவில்லை. அவரால் வர இயலவில்லை எனக் குறிப்பிட்டு, நீதிபதியிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்