பெரியார் குறித்த சர்ச்சைக் கருத்து: சீமான் மீது 62 வழக்குகள் பதிவு

2 mins read
823fec88-d4b9-4790-a7ae-026ae5852059
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். - படம்: ஊடகம்

சென்னை: பெரியார் குறித்து சர்ச்சைக் கருத்துகளைக் கூறியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சட்டத் துறை இணை செயலாளர் மருதுகணேஷ் புகார் கொடுத்தார்.

இதேபோல, தமிழகம் முழுவதும் சீமானுக்கு எதிராக திக, திமுக, தபெதிகவினர் புகார் கொடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில், சென்னை உட்பட 11 மாவட்டங்களில் சீமான் மீது 62 வழக்குகளை காவலர்கள் பதிவு செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகின.

அதைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை அரசியல் கட்சியினர் நடத்தினர். புதுச்சேரி நெல்லித்தோப்பில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற சீமானுக்கு எதிராக திராவிட இயக்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மதுரை கே.கே.நகரை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘பெரியார் குறித்து சீமான் கூறிய கருத்துகள் அவதூறானவை. சமூக ஊடகங்களில் இது வேகமாகப் பரவி வருகிறது. எனவே, சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யவில்லை. எனது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்,’’ என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், ‘‘சீமான் தெரிவித்த கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளன. எனவே, மனுதாரரின் மனுவை பெற்று காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து, நீதிமன்றத்தில் 20ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,’’ என்று உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்