கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டக்கூடாது: நீதிமன்றம்

2 mins read
dc73253b-b005-4356-9cbb-a37e5d2c9546
கந்தசாமி கோயில் (கந்தகோட்டம்) சென்னை - படம்: இணையம்

சென்னை: கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடங்களில், கோயில் நிதியிலிருந்து வணிக வளாகங்களும் குடியிருப்புகளும் கட்டத் தடை விதிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த ஏ.பி. பழனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, வியாழக்கிழமை (அக்டோபர் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நிதியைப் பயன்படுத்தி, வணிக வளாகங்கள் கட்ட கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறிப் பல கோயில்களில் வணிக வளாகங்கள் கட்டப்படுவதாகவும் மனுதாரர் ஏ.பி. பழனி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயில் வணிக வளாகக் கட்டுமானப் பணிகள் 80 விழுக்காடு முடிந்து விட்ட நிலையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏழு கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்தக் கட்டடங்கள்மூலம் மாதம் ஏழு லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இது போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் திருத்தம் செய்யத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கந்தக்கோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில் நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை தொடர அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

அதே வேளையில், அந்தக் கட்டுமானங்களை இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இந்த வழக்கில் நவம்பர் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு, கோவில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்