சென்னை: இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதல் பதற்ற நிலையை எட்டியபோதும், சென்னை மாநகரத்துக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் வரவில்லை என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
சென்னை செய்தியாளர் மன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“சென்னையில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோயில்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
“சந்தேக நபர்களைக் கண்டறிய மக்களோடு மக்களாக காவல்துறையினர் சாதாரண உடையிலும் சீருடையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
“அது மட்டுமில்லாமல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சென்னை முழுவதும் வாகன சோதனையும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது,” என்றார் ஆணையர் அருண்.
சென்னை மாநகரத்துக்கு இதுவரை தனிப்பட்ட முறையில் எந்தவொரு அச்சுறுத்தலும் வரவில்லை என்று குறிப்பிட்ட அவர், சேப்பாக்கம் விளையாட்டரங்கிற்கு மட்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்றார்.