மணப்பாறை அருகே பரபரப்பு: காவலர்களின் தாக்குதலைக் கண்டித்து மக்கள் மறியல்

மணப்பாறை அருகே பரபரப்பு: காவலர்களின் தாக்குதலைக் கண்டித்து மக்கள் மறியல்

2 mins read
41f77936-0c81-4b4a-8380-cfc49c3ee50e
வளநாடு கைகாட்டி - புத்தாநத்தம் சாலையில் முட்கள், மரக்கட்டைகளைப் போட்டுத் தடுத்து, அதிரடி சாலை மறியலில் வெள்ளையக்கோன்பட்டி கிராம மக்கள் ஈடுபட்டனர். - படம்: இந்து தமிழ் திசை

திருச்சி: மணப்பாறை அருகே காவலர்கள் தாக்கியதைக் கண்டித்து, பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டு தேர்தலைப் புறக்கணித்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட வெள்ளையக்கோன்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் (வாக்குச்சாவடி எண் 225) வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது, வாக்குச்சாவடிக்கு வெளியே சுமார் 100 மீட்டர் தொலைவில் அரசியல் கட்சியினர் சிலர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிரடிப்படை காவலர்கள், கூட்டத்தைக் கலைந்து போகச் சொன்னபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவலர்கள் சிலரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, திமுக நிர்வாகி சண்முகமூர்த்தி என்பவரை காவலர்கள் தாக்கி, வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

காவலர்களின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த வெள்ளையக்கோன்பட்டி கிராம மக்கள் உடனடியாக வாக்களிப்பதைப் புறக்கணித்தனர்.

வளநாடு கைகாட்டி - புத்தாநத்தம் சாலையில் முட்கள், மரக்கட்டைகளைப் போட்டுத் தடுத்து, அதிரடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அழைத்துச் செல்லப்பட்ட சண்முகமூர்த்தியை உடனே விடுவிக்க வேண்டும். பொதுமக்களைத் தாக்கிய காவலர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது.

இந்த மறியல் போராட்டத்தால் காலை 11:10 மணி முதல் மதியம் 2:40 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முற்றிலும் முடங்கியது. மொத்தம் உள்ள 1,016 வாக்காளர்களில், மதியம் வரை 316 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை டி.எஸ்.பி. காவியா, உதவி தேர்தல் அலுவலர் பாலகாமாட்சி ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டத்தின் தீவிரத்தை அடுத்து சண்முகமூர்த்தி விடுவிக்கப்பட்டார்.

மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது, மறியலில் ஈடுபட்டுள்ள மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்