தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வக்பு சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து மாபெரும் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

1 mins read
3972b096-1299-48b8-bba4-7886ab9b9cd7
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடியதாக உள்ளது. எனவே அந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஏப்ரல் 9ஆம் தேதி தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், வேற்றுமையில் ஒற்றுமை பேணும் மரபையும், மதச்சார்பற்ற பண்புகளையும் அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தை சிறுமைப்படுத்தி அழித்தொழித்துவிட்டு, நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை நிராகரித்து பெரும்பான்மை மத அடிப்படை வாதத்தின் அச்சில் நாட்டை ‘இந்து ராஷ்டிரமாக’ கட்டமைக்கும் முயற்சிகளை ஆர்எஸ்எஸ் தீவிரப்படுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக முஸ்லிம் மக்களின் சமூக சொத்துகளைப் பராமரித்து வரும் வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்து, முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் மசோதாவை நிறைவேற்றி, சட்டமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள், ஜனநாயக சக்திகளின் கருத்துகளையும், ஆலோசனைகளையும், திருத்தங்களையும் முற்றாக நிராகரித்து, ஏதேச்சதிகார முறையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்தும், தேச ஒற்றுமையை, நீடித்த அமைதியை பாதுகாக்க வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஏப்ரல் 9 ஆம் தேதி, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திரு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்