காஞ்சிபுரம்: பச்சிளங் குழந்தையாக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட தவறான அறுவை சிகிச்சையால் ஒரு கையை இழந்த இளைஞருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க 32 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், தற்போது நீதி பெற்றுள்ள தினேஷ் என்ற அந்த இளையர், தனக்கு இழப்பீடு வேண்டாம் என்றும் தன் தகுதிக்கு ஏற்ற அரசுப் பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெகன்நாதன், சாந்தி தம்பதியர்க்குப் பிறந்தவர் தினேஷ் (வயது 34). பிறந்த ஒரு மாதத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கும், பின்னர் சென்னை அரசினர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.
சென்னை மருத்துவமனையில் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஊசி செலுத்தும்போது அதன் வலது கை வீங்கிவிட்டதால் கையை அகற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியதாகத் தெரிகிறது. பின்னர் வலது கை அகற்றப்பட்டது.
ஆனால் தவறான, கவனக் குறைவான சிகிச்சையால் மகன் தினேஷின் கையை மருத்துவர்கள் அகற்றிவிட்டதாக புகார் எழுப்பினார் ஜெகன்நாதன்.
பின்னர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுத்த அவர், தன் மகனுக்கு ரூபாய் பதினைந்து லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனக் கோரினார்.
கடந்த 32 ஆண்டுகளாக இந்த வழக்கை பல்வேறு நீதிமன்றங்கள் விசாரித்தன. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், அரசு சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோருடன் விசாரணை நடத்திய நீதிமன்றம், அவர்கள் மூவரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட தினேஷுக்கு ரூபாய் பத்து லட்சம் இழப்பீட்டு தொகையை வட்டியுடன் வழங்க வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது.
வழக்கை நடத்த செலவழிக்க முடியாது என்பதால் தினேஷ் குடும்பத்தினர் இலவச சட்ட உதவி மூலமாகவே வழக்கை நடத்தி தங்களுக்கான தீர்ப்பை பெற்றுள்ளனர்.

