தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெருநாய்க்கடியைக் கட்டுப்படுத்த தொடர் இயக்கம்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

2 mins read
5bf4c1a4-195e-4cd6-a445-5195aca6afdb
அன்புமணி ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: தெருநாய்க்கடியால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் சிக்கல் தமிழகம் எதிர்கொண்டு வரும் பெரும் நெருக்கடி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தெரு நாய்க்கடி சிக்கலுக்கு அரசால் மட்டுமே தீர்வு காண முடியாது என்றும் புளுகிராஸ் உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரை உள்ளடக்கிய செயல்திட்டத்தை உருவாக்கி, அதன் வாயிலாக தெருநாய்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்நடவடிக்கையை தமிழக அரசு தொடர் இயக்கமாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“தெருநாய்க்கடி சிக்கலுக்கு ஒன்றைக் காரணமோ அல்லது ஒற்றைத் தீர்வோ இல்லாத நிலையில், அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து. சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைத்து வெறிநாய்க்கடி சிக்கலுக்கு தீர்வு காண்பதை ஓர் இயக்கமாக மாற்ற வேண்டும்.

“தமிழகத்தில் 2025ஆம் ஆண்டில் கடந்த 3 மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் கூடுதலானவர்கள் நாய்க்கடிக்கு ஆளாகியிருப்பதாகவும் கடந்த ஆண்டில் வெறிநாய் கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன,” என்று அன்புமணி கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவில் சாலை விபத்துகளில் நிகழும் உயிரிழப்புகளில் 21 விழுக்காட்டுக்கு காரணமான விபத்துகள் தெரு நாய்களால் தான் ஏற்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் ஏறக்குறைய 40 மில்லியன் நாய்கள் உள்ளன என்றும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதுதான் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்