சென்னை: சென்னை மாநகரப் பேருந்தில் பயணி தாக்கி உயிரிழந்த நடத்துநரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து நடத்துநராகப் பணியாற்றிவந்த ஜெகன் குமாருக்கும் பயணி ஒருவருக்கும் வியாழக்கிழமை (அக்டோபர் 24) வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அப்பயணி தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே ஜெகன் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “உயிரிழந்த அரசு மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெகன் குமாரின் குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஜெகன்குமாரின் குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்,” என்று கூறியுள்ளார்.