விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் அக்கட்சியின் முக்கியமான தலைவர்கள், நிர்வாகிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, தலைமையிலான எந்தக் கூட்டணியில் பாமக இடம்பெறுவது என்பது தொடர்பில் இருவருக்கும் இடையே மறைமுக மோதல் நிலவுவதுதான் தற்போதைய மோதலுக்கு முக்கியக் காரணம்.
“அதேபோல் ராமதாஸ், தனது பேரனை பாமக இளையரணித் தலைவராக்க முடிவு செய்ததும் பிரச்சினைக்கு வித்திட்டது,” என்று அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுவதாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில், மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில், மகன் அன்புமணி மீதான அதிருப்தியை ராமதாஸ் தனது பேச்சின்போது வெளிப்படுத்தினார்.
“பாமக தலைவராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார் அன்புமணி. இதனால் ராமதாசுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. அதனால் சித்திரைத் திருவிழாவின்போது அன்புமணியை யாரும் தலைவர் எனக் குறிப்பிடக் கூடாது என அவர் நிபந்தனை விதித்தார்.
“இதற்குப் பதிலடி தரும் வகையில், ராமதாசின் பேரன் முகுந்தனை விழா மேடையில் அமர வைக்கக்கூடாது என அன்புமணி நிபந்தனை விதித்தார் எனக் கூறப்படுகிறது,” என்று பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
இந்நிலையில், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெற்றது.
ஆனால், அக்கூட்டத்தை அன்புமணி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர். மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், முக்கியமான நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், மொத்தம் உள்ள 180 பேரில், 40 பேர் மட்டுமே கலந்துகொண்டதாகத் தெரிகிறது.
இதனால் ஏமாற்றம் அடைந்தபோதிலும், கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், படுத்துக்கொண்டு வெற்றி பெறுவது எப்படி என்று தனக்குத் தெரிந்த வித்தையை நிர்வாகிகளுக்கு தெரிவிப்பதற்காக கூட்டம் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
“தமிழகத்தில் 50 தொகுதிகளில் பாமக வெற்றி பெற வேண்டியதற்கான ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்டோம். இக்கூட்டத்தில் பங்கேற்க அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
“சித்திரை மாநாட்டுக்காக கடும் வெயிலில் பணியாற்றியதால் நிர்வாகிகள் சிலருக்கு களைப்பு ஏற்பட்டிருக்கலாம்.
“சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் கூட்டணி அமைப்போம். சிங்கத்துக்கு காலில் பழுது ஏற்பட்டாலும் சீற்றம் குறையவில்லை என்பார்கள். சிங்கத்தின் கால்கள் பழுதுபடவே இல்லையே, அப்படியென்றால் சீற்றம் அதிகமாகத்தான் இருக்கும்,” என்றார் ராமதாஸ்.