லண்டன்: தமிழக முதல்வர் விஜய் பங்கேற்க இருந்த லண்டன் பொது நிகழ்ச்சி, பாதுகாப்புக் காரணங்களால் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. லண்டனின் புகழ்பெற்ற ‘தி ஷார்ட்’ (The Shard) கோபுரத்திற்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்ற முதல்வர் விஜய்யைக் காண பல மணி நேரத்திற்கு முன்பிருந்தே ஏராளமான தமிழர்களும் ரசிகர்களும் திரளத் தொடங்கினர். கூட்டம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக அதிகரித்ததால், அப்பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் பெருநகர காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தினரும், முதல்வரின் நிர்வாகக் குழுவினரும் ஒலிபெருக்கி மூலம் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.
நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முதல்வரின் விடுதிக்கு முன்போ அல்லது அவர் பயணிக்கும் வழிகளிலோ திரள வேண்டாம் என தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சமூக ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்தது.
