சென்னை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பெரும் இழுபறி நீடிக்கிறது.
அதிக தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்கும்படி காங்கிரஸ் கட்சி கேட்டு வருகிறது.
அதனைக் கழற்றிவிடுவதன் மூலம் மத்திய அரசின் நெருக்கடியைக் குறைப்பது, தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலைத் தீர்ப்பது என ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ அடிப்பதற்குத் திமுக திட்டமிடுவதாக தமிழகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் பிடிவாதம்
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பாஜக 11.24 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. இது, தாங்கள் பெற்ற 10.69 விழுக்காடு வாக்குகளை விடவும் அதிகமாகிப் போனதால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்தது.
இந்தச் சூழலில், தமிழகத்தில் தமது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால், ஆட்சியில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்பதில் காங்கிரஸ் இம்முறை உறுதியாக உள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் 41 தொகுதிகள், 2 ராஜ்யசபா இடங்களைத் தரும்படி காங்கிரஸ் அடுக்கடுக்கான கோரிக்கைகளை முன்வைப்பது திமுக தலைமையிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கறார் காட்டும் திமுக
ஆனால், திமுக ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
அத்துடன், காங்கிரஸ் மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருப்பதற்கு திமுகதான் காரணம் எனக் கூறி, கூடுதல் தொகுதிகளைத் தர மறுத்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மூத்த அமைச்சர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கினர்.
காங்கிரஸ் தமது கூட்டணியில் இருப்பதால்தான் மத்திய அரசிடம் இருந்து அமலாக்கத்துறை, வருமான வரித் துறை மூலம் திமுகவிற்கு நெருக்கடி வருகிறது. கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினால் இந்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.
காங்கிரஸ் வெளியேறினால், அவர்களுக்கு ஒதுக்கப்படும் 25க்கும் மேற்பட்ட இடங்களை மிச்சப்படுத்தலாம். அந்த இடங்களைக் கொண்டு தேமுதிக, பாமக போன்ற புதிய கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்தலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
“நாம் யாரையும் வெளியேற்ற வேண்டாம், அவர்களாகவே சென்றால் தடுத்து நிறுத்தவேண்டாம்,” என்று திரு ஸ்டாலின் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கேட்டதைவிடக் குறைவான இடங்களை ஒதுக்குவதன் மூலம், அவர்களைத் தானாகவே வெளியேறச் செய்துவிடலாம் அல்லது அவர்கள் கூட்டணிக்குள் நிலைத்திருக்கும் வரை மற்ற கட்சிகளைச் சமாளிப்பது எனத் திமுக காய் நகர்த்தி வருகிறது.

