சென்னை: தமிழகத்தில் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கவேண்டும் என தமிழக காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
வியாழக்கிழமை சட்டப்பேரவையில் பேசிய அக்கட்சியின் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், 16 வயதுக்குட்பட்டோர்க்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
“பதின்ம வயது சிறார்களிடம் சமூக ஊடகங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பல்வேறு நாடுகளில் 16 வயதுக்கு குறைந்த குழந்தைகள் திறன்பேசியைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
“அதேபோல், நமது மாநிலத்திலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்,” என்றார் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன்.

