தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் துப்புரவுப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது

2 mins read
f8aecee6-15aa-4253-b578-c2f134f56ac4
13 நாள்களாகப் போராட்டம் செய்த துப்புரவுப் பணியாளர்கள் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டனர். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையில் 13 நாள்களாகப் போராட்டம் நடத்திய துப்புரவுப் பணியாளர்கள் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் அவர்களைப் பின்னர் திருமண மண்டபங்களுக்குக் கொண்டுசென்றனர்.

சென்னையின் இரண்டு வட்டாரங்களில் துப்புரவுப் பணிகளைத் தனியார்மயப்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

அவர்களை அகற்ற ஏறக்குறைய 400 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ரிப்பன் கட்டடத்திற்கு அருகில் உள்ள நடைபாதையில் ஆர்ப்பாட்டம் செய்த வழக்கறிஞர்கள், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் உட்பட சுமார் 600 பேர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்கள் 15 பேருந்துகளில் கண்ணப்பர் திடலுக்கு அருகில் இருக்கும் தனியார் திருமண மண்டபங்கள் சிலவற்றுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. போராட்டத்தில் ஈடுபட்டோரில் பலர் காவல்துறையினர் நடவடிக்கையைத் தொடங்கியதும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலையிட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும்வரை போராட்டம் தொடரும் என்று பணியாளர்கள் முன்னதாகக் கூறியிருந்தனர். அவர்கள், வேலைகளை நிரந்தரமாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். ராயபுரத்திலும் திரு வி க நகரிலும் திடக் கழிவுப் பொருள்களை அகற்றும் பணிகளைச் சென்னை மாநகராட்சி தனியார் நிறுவனங்களுக்கு வழங்க முடிவுசெய்திருந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகப் போராட்டம் நடத்தப்பட்டது.

அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே ஆர்ப்பாட்டம் செய்யலாம் என்ற சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவையும் மீறி ஊழியர்கள் மற்ற இடங்களிலும் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே துப்புரவுப் பணியாளர்களின் போராட்டத்தால் குவிந்த 2,145 டன் குப்பை ஆகஸ்ட் 11, 12ஆம் தேதிகளில் அகற்றப்பட்டதாக மாநகராட்சி வெளியிட்ட தகவல் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்