சென்னை: “தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் மக்கள் நலத்திட்டங்களை முடக்க வலதுசாரி சனாதன சக்திகள் சதி செய்து வருகின்றன. சிறு வாய்ப்பு கிடைத்தாலும் தமிழ்நாடு அரசுக்கும் திராவிடக் கொள்கைகளுக்கும் எதிராக அதைத் திருப்பி விடுவதில் அவர்கள் முனைப்பாக உள்ளனர்,” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
முதல்வருடனான சந்திப்பில் நீட் தேர்வை ரத்துச் செய்தல், குற்றவியல் சட்ட விவகாரம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆகியவற்றைப் பற்றி சாதியவாதிகளையும் மதவாதிகளையும் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் முதல்வரிடம் மனு அளித்தார். அத்துடன் நீட் தேர்வு ரத்து தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கூட அரசியல் சதித்திட்டம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட உடனேயே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்தது. எடுத்த எடுப்பிலேயே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பாஜக தரப்பில் கோரிக்கை வருகிறது. அத்துடன் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்துடன் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது.
“திமுக அரசுக்கு எதிராகப் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகின்றனர். கருணாநிதியை கொச்சையாக விமர்சிப்பது அரசியல் அநாகரிகத்தின் உச்சம். சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் தரும் கட்சியினரைக் கண்காணிக்க கோரிக்கை வைத்துள்ளோம் .
நீட் தேர்வு குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தினோம். நீட் தேர்வில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளை மறைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது.” என்றார்.
“கொலை செய்யும் கூலிப்படைக் கும்பலையும் அவர்களுக்கு அரசியல் புகலிடம் கொடுப்போரையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
“ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணியில் உள்ளவர்கள், கூலிப் படையினர் உள்ளிட்ட அனைவரையும் கைதுசெய்து தண்டிக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்வது தடுக்கப்பட வேண்டும்,” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

