சென்னை: தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சுமத்தப்பட்டவை என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலையாகி வெளியே வருவது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் தவறு செய்தால் அதனை ஒப்புக்கொள்ளக் கூடியவன். காவல் துறையை வைத்து எனக்கு தொடர்பு இல்லாத ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளனர். நிச்சயமாக அவர்கள் எண்ணம் நிறைவேறாது,” என்று கரூரில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
அரசியல் களத்தில் மக்களைச் சந்தித்து வெற்றி பெற முடியாதவர்கள் குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் களத்தில் இருந்து தம்மை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக பொய் வழக்குகளைத் தொடுத்துள்ளதாகக் கூறினார்.
“நான் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதே அவர்களின் விருப்பம். அதனால்தான் பொய் வழக்குகளைப் பதிந்து நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தர முயற்சிக்கிறார்கள்,” என்றார் செந்தில் பாலாஜி.
தமக்கு எதிராகச் சதி நடப்பதாகவும் அவர் கூறினார். முன்னதாக, செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வழக்கை இழுத்தடிக்க முயற்சி செய்வதாக நீதிபதிகள் சாடினர்.
இவ்வாறு செய்தால் இந்த வழக்கை குற்றஞ்சாட்டப்பட்டவரின் வாழ்நாள் முடியும் வரை விசாரித்து முடிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.