புதுடெல்லி: நாட்டு மக்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தியைத் தடுத்து நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.
சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை இந்திய ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
‘எஸ்ஐஆர்’ நடவடிக்கையால் வாக்காளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் நாடாளுமன்றத்தின் மக்களவை அல்லது மாநிலங்களவை உறுப்பினர்களால் மட்டுமே பேசப்பட வேண்டியவை அல்ல என்றும் அந்தச் சிரமங்கள் மத்திய அரசால் தீர்க்கப்பட வேண்டியவை என்றும் திரு கமல்ஹாசன் கூறினார்.
இந்திய மண்ணில் ஏற்கெனவே போதுமான அளவு குருதி சிந்தப்பட்டுவிட்டது என்றார் அவர்.
எதிர்க்கட்சிகள் ‘எஸ்ஐஆர்’ நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகக் குறிப்பிட்ட அவர், தங்களுக்கு ஒன்றுக்கொன்று முரண்பாடான பதில்களே கிடைத்தன என்றார்.
அந்தப் பதில்களைக் கொண்டு தமிழக மக்களுக்கு தங்களால் நம்பிக்கையூட்ட முடியவில்லை என கமல்ஹாசன் சுட்டிக்காட்டினார்.
பரந்து விரிந்த இந்தியத் தாய்நாட்டின் அனைத்து மாநில மக்களும் எதிர்கொள்ளும் தேசிய அளவிலான சிரமமாக எஸ்ஐஆர் நடவடிக்கை உள்ளது என்றும் கல்வி கற்கும் வாய்ப்பற்ற, அதிகாரமற்ற எளியவர்களால் இப்பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்றும் திரு கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய நிலவரப்படி, தன் வாக்குரிமை பத்திரமாக இருப்பதாகவும் ஒருவேளை அதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தன் கட்சித் தோழர்கள் தனக்காகப் போராடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த நாட்டின் எல்லைக்குள் நம் மக்களைப் பாதுகாக்க பொறுப்பு அளிக்கப்பட்ட படை வீரர்கள் நாம். நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் அரசியலமைப்புச் சட்டம் மட்டும்தான். தவறான பயன்பாடு, வசதியான மறதி அல்லது அலட்சியம் ஆகியவற்றால் அதை அழிக்கவோ துருப்பிடிக்கவோ அல்லது உடைந்துபோகவோ நாம் அனுமதிக்கக் கூடாது,” என்றார் கமல்ஹாசன்.
‘எஸ்ஐஆர்’ விவகாரம் தொடர்பாக வெறும் ஆலோசனை மட்டும் போதாது என்றும் இப்பிரச்சினை இந்திய ஜனநாயகத்துக்கு எதிரான ஆபத்தான அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றார் அவர்.

