தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘தேசிய கீதத்துக்கு அவமதிப்பு’: சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

2 mins read
83a595ed-fad1-4306-8ce5-fd7ed2824b6e
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில் தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், “அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் ஆளுநர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் திங்கட்கிழமை (ஜனவரி 6) ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கியது.

முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவைச் செயலர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவைக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி சிறிது நேரத்திலேயே வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் வெளியேறிய நிலையில் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு முழுமையாகத் தமிழில் வாசித்தார்.

அவை முன்னவர், தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில், குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவை எப்போதும் அதன் மரபை பின்பற்றி வருகிறது என்று அவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். மேலும், அச்சிடப்படாதவை அவைக் குறிப்பில் இடம்பெறாது எனவும் அவைத் தலைவர் அப்பாவு விளக்கம் கொடுத்துள்ளார்.

காரணம் என்ன? 

தமிழக சட்டப்பேரவை திங்கட்கிழமை காலை கூடியவுடன் தேசிய கீதம் இசைக்க ஆளுநர் வலியுறுத்தியதாகவும், ஆனால் அதனைவிடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதால் ஆளுநர் அதிருப்தியடைந்து அவையில் இருந்து வெளியேறினார் என்றும் செய்திகள் வெளியாகின.

ஆளுநர் மாளிகை விளக்கம் 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்கட்கிழமை மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். தேசிய கீதம் அனைத்துச் சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது.

திங்கட்கிழமையன்று ஆளுநர் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக முதலமைச்சர், சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு 

அவையைப் புறக்கணித்து காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் வெளியேறினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, “ஆளுநர் தமிழக மக்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறார். மாற்று அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கிறார். இது ஜனநாயக விரோத போக்கு. கூட்டாட்சிக்கு எதிரானது,” என்று கூறினார். காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் கருப்பு சின்னம் அணிந்து பேரவைக்கு வந்திருந்தனர்.

குறிப்புச் சொற்கள்