உதகை: உதகை நகராட்சி ஆணையராக இருந்த ஜஹாங்கீர் பாஷா, ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் லஞ்சப் பணத்துடன் பிடிபட்ட பின்னரும் அவரை திருநெல்வேலி உதவி ஆணையராக நியமித்தது குறித்து மக்களிடையே கடும் விமர்சனம் கிளம்பியது.
அதனைத்தொடர்ந்து அவரை ஒரு வாரத்திற்கு முன்பாகவே பணியிடை நீக்கம் செய்துள்ளதாக பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார் நகராட்சி நிர்வாகங்களின் ஆணையர்.
உதகை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட ஜஹாங்கீர் பாஷா மீது, விதிகளை மீறி கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவதாகவும், அதற்காக பெருமளவில் லஞ்சம் வாங்குவதாகவும் நீலகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவலருக்குத் தொடர்ந்து புகார்கள் சென்றிருக்கின்றன.
அதனையொட்டி அவரைத் தீவிரமாக கண்காணித்தபோது அவர் லஞ்சப் பணத்தை அலுவலகத்தில் வாங்காமல் வெவ்வேறு இடங்களில் உள்ள கடைகள், உணவகங்களில் கொடுக்கச் சொல்லி, பின் ஊருக்குத் திரும்பும்போது அவற்றை மொத்தமாக சேகரித்துச் செல்வதைக் கண்டுபிடித்தனர்.
அதன்படி நவம்பர் 9ஆம் தேதியன்று அவருக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்தை அலுவலகத்தில் நிறுத்திவிட்டு, தனியார் வாடகை வாகனத்தில் ஏறிக் கிளம்பியுள்ளார்.
அவர் பல இடங்களில் வாகனத்தை நிறுத்தி பைகள், பண உறைளை வாங்குவதைப் பார்த்த காவலர்கள் கையும் களவுமாக அவரைப் பிடித்தனர்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, உதகை நகராட்சி ஆணையராக ஜஹாங்கீர் பாஷா கடந்த ஆகஸ்ட்டில் பொறுப்பேற்ற பின், 36 வார்டுகளின் குடியிருப்புகளை வணிகக் கட்டடமாக மாற்ற அனுமதி வழங்கவும், பிரபல ஜவுளிக்கடை கட்டடத்திற்கு புதிதாக சொத்து வரி நிர்ணயிக்கவும், சேரிங்கிராஸ் பகுதியில் கார் நிறுத்துமிடம் ஒதுக்கீடு செய்யவும் என பல்தரப்பட்ட பணிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வாங்கியுள்ளார்.
கட்டடங்களின் பரப்பளளவைக் குறைத்து வரி விதித்தது, குடியிருப்பை கடையாக மாற்றியது என பல விதமான காரணங்களுக்காகவும் லஞ்சம் வாங்கியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மொத்தம் 41 கட்டடங்களில் இந்தத் தொகையை வசூல் செய்ததை அறிந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவலர்கள், அந்தக் கட்டடங்களின் மொத்த விபரங்களையும் நகராட்சி அலுவலகத்திலிருந்து பதிவிறக்கம் செய்துள்ளனர் என முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.