மும்பையில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

2 mins read
0b9844f4-fa6c-45bf-a0ec-96310c9212cc
மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விடாமல் பெய்துவரும் கனமழையால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. - படம்: ஏஎப்பி

மும்பை: மகாராஷ்டிராவின் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பெய்யத் தொடங்கிய மழை திங்கட்கிழமையும் தொடர்ந்து பெய்தது. அதையடுத்து, தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. அதனால், மும்பையின் பல இடங்களில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சாலை, ரயில், விமானப் போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகரும் நிலை பல மணி நேரத்திற்கு நீடித்ததாகக் கூறப்படுகிறது.

அந்தேரி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியிருப்பதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, கோகலே பாலம் வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மும்பை, தானே மற்றும் ராய்கர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் என்பதால் அப்பகுதிகளுக்கு வானிலை நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சூழலில், அப்பகுதி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மும்பையில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடலா பகுதியில் சென்றுகொண்டிருந்த மோனோ ரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திடீரென நடுவழியில் நின்றது. அதனால் பயணிகள் சில மணி நேரம் வரை ரயிலுக்குள்ளேயே சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர், அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக மாற்று ரயிலில் ஏற்றிவிடப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை கொங்கண், கோவா, மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடாவில் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், புனே மாவட்டத்திலும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அந்த மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்