சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை, வெப்பச்சலனம் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இங்குள்ள ஏரிகள், அணைகள், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 72.85% ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், 1,810 ஏரிகளும் நிரம்பியுள்ளன.
இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்தின் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 90 அணைகளின் நீர் இருப்பு கடந்த 10 நாள்களில் 14% அதிகரித்து 72.85% ஆக உள்ளது.
“குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி, தருமபுரி வறட்டாறு, கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி, பாம்பாறு, கடலூர் மாவட்டம் வீராணம், தென்காசி குண்டாறு, தேனி மஞ்சளாறு, சோத்துப்பாறை, விருதுநகர் குல்லூர்சந்தை, கன்னியாகுமரி மாம்பழத்துறையாறு, கரூர், நொய்யல் ஆத்துப்பாளையம், திருப்பூர் அமராவதி, கோவை மாவட்டம் சோலையாறு, ஆழியாறு, திண்டுக்கல் வர்தமாநதி, குதிரையாறு, மருதாநதி, ஈரோடு குண்டேரிபள்ளம், திருவண்ணாமலை - சாத்தனூர், திருப்பத்தூர் -ஆண்டியப்பனூர் ஓடை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன,” என்று தெரிவித்துள்ளனர்.

