ஆய்வுக்காக வகுப்பறையில் மாட்டுச் சாணம் பூசிய கல்லூரி முதல்வரால் சர்ச்சை

1 mins read
5368ee5f-2f11-410f-b504-ecf04fa2724d
தன்னுடைய கைகளால் வகுப்பறைகளில் உள்ள சுவர்களில் மாட்டுச்சாணத்தைப் பூசினார் கல்லூரி முதல்வர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: கல்லூரி வகுப்பறையில் மாட்டுச் சாணத்தைப் பூசிய கல்லூரி முதல்வரின் செயலால் புதுச்சர்ச்சை வெடித்துள்ளது.

இச்சம்பவம் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட லட்சுமிபாய் கல்லூரியில் நிகழ்ந்துள்ளது. அக்கல்லூரியின் முதல்வராக உள்ளார் பிரத்யூஷ் வத்சலா.

அண்மையில் இவர் கல்லூரியில் உள்ள பல வகுப்பறைகளைத் திடீரென பார்வையிட்டார். அடுத்த சில நிமிடங்களில் அவரே தன்னுடைய கைகளால் வகுப்பறைகளில் உள்ள சுவர்களில் மாட்டுச்சாணத்தைப் பூசினார்.

எதற்காக அவர் இவ்வாறு செய்தார் என்று மாணவர்களுக்கு முதலில் புரியவில்லை. பின்னர் ஓர் ஆய்வுக்காக இவ்வாறு செய்ததாக முதல்வர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தியப் பாரம்பரிய முறைப்படி, சுவர்களில் மாட்டுச்சாணத்தைப் பூசினால் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரிப் பேராசிரியர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் பொருட்டே கல்லூரி வகுப்பறைச் சுவர்களில் தாமே தம் கைகளால் சாணத்தைப் பூசியதாகவும் பிரத்யூஷ் வத்சலா விளக்கம் அளித்துள்ளார்.

ஆய்வின் முடிவுகள் ஒரு வாரத்துக்குள் வெளியாகும் என்றும் அதன் பின்னர் விரிவாக விளக்கம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் நிலையில், முதல்வரின் இச்செயல்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்