தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொரோனா பரவல்: பீதியடைய வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்து

2 mins read
ea860d4a-2b70-4ebc-aa3c-e34654c7fdba
கர்நாடகாவில் 8 பேரும், குஜராத்தில் 6, டெல்லியில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். - படம்: ஊடகம்

சென்னை: இந்தியா முழுவதும் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது.

அண்மைய நாள்களில் ஆக அதிகமாக, கேரளாவில் 69 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 44 பேரும் தமிழகத்தில் 34 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் 8 பேரும் குஜராத்தில் 6, டெல்லியில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹரியானா, ராஜஸ்தான், சிக்கிம் மாநிலங்களில் தலா ஒருவர் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அச்சப்படும் அளவுக்கு இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது.

அதன் பின்னர், சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் ஓரிருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக, மாநிலத்தில் ஒருவர்கூட தொற்றுக்கு ஆளாகவில்லை என்ற நிலை கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை தொற்றுப் பாதிப்பு பரவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் பொதுமக்கள் பீதி அடைந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், புதிய வகை தொற்றால் பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனாவின் தீவிரம் குறைந்துவிட்டாலும், அதன் தீவிரத்தைக் கண்டறிய தொடர் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என்றும் பல மாநிலங்களில் இவ்வாறு பரிசோதனை செய்யப்படுவதில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

“தமிழகத்தில் மட்டும் கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்படுவதால், இங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேவையில்லாதபோது வழக்கமான பரிசோதனை செய்வதைக் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். .

குறிப்புச் சொற்கள்