சென்னை: பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த தனியார் நிறுவனத்தின் மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சென்னையில் இயங்கி வரும் ‘ரெபெக்ஸ்’ நிறுவனம் போலி கொள்முதல் ஆவணம் மூலம் ரூ.1,112 கோடி தொகையை கணக்கில் காட்டாமல் ஏமாற்றியுள்ளது.
இந்நிலையில், வருமானவரித் துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள அந்நிறுவனத்தின் தியாகராய நகர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மோசடி விவகாரம் அம்பலமானது.
அனில் ஜெயின் தலைவராக உள்ள இந்நிறுவனம் நிலக்கரி இறக்குமதி, மின்சார கார்களுக்கான பேட்டரி தயாரிப்பு, குளிர்சாதனப் பெட்டிகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளது.
மேலும், இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்கி வருகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. இதற்காக வருமானத்தைக் குறைத்து காட்டியது தெரிய வந்துள்ளது.
நிலக்கரி கொள்முதலில் முறைகேடு செய்ததுடன், 53 பேரிடம் ரூ.382 கோடி தொகை முதலீடாகப் பெறப்பட்டுள்ளது. இவர்களில் 15 பேர் வரி தாக்கல் செய்யாதவர்கள். மீதமுள்ள 38 பேர் தங்கள் பணப் பரிவர்த்தனை குறித்து தகவல்களை அளிக்கவில்லை. எனவே, சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்கு இடமுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே, ரெபெக்ஸ் நிறுவனத்தின் முதன்மைப் பொறுப்பாளர் தனது கார் ஓட்டுநர் பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அதில் ரூ.8.5 கோடி பணத்தை செலுத்தியதுடன் அந்த நிறுவனம் மூலமாக ரூ.37 கோடிக்கு தனி விமானம், ரூ.10 கோடிக்கு உயர் ரக சொகுசு கார்கள் ஆகியவற்றை வாங்கியுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ரூ.10 கோடி அளவுக்கு ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே, ரெபெக்ஸ் நிறுவனம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்ததாகவும் அதில் சரிபாதி தொகையை வேறு நிறுவனத்துக்கு உடனடியாக மாற்றியதாகவும் கூறப்படுகிறது.


