சென்னை: இந்தியாவில் அதிகாரமும் செல்வாக்கும் கொண்ட நபர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பது மிகவும் சிரமமான காரியம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில், முன்னாள் மாநகராட்சி ஆணையர்களான இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரப்பட்டிருந்தது.
அக்கோரிக்கை மீது இந்திய அரசு நீண்ட காலமாகப் பதில் அளிக்காமல் தாமதம் செய்துவந்த நிலையில், அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “அதிகாரமிக்க நபர்கள் மீது ஊழல் வழக்கை விசாரிக்க அனுமதி பெறுவதிலேயே இவ்வளவு தாமதம் ஏற்பட்டால், வழக்கு விசாரணை எப்படி நடக்கும் என்பதை அந்தக் கடவுள்தான் தீர்மானிக்க வேண்டும்,” என்று தன் மன வேதனையை வெளிப்படுத்தினார் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்.
வழக்கு தொடர அனுமதி வழங்க தாமதம் ஏற்படுவது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, ஒப்புதல் கோரிய கடிதத்தின் தற்போதைய நிலை குறித்து மத்திய அரசின் பணியாளர், பயிற்சித்துறை சார்புச் செயலர் முன்னிலையாகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையைச் செப்டம்பர் 16க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


