நூல் கொள்முதலில் 3 ஆண்டுகளாக முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறை

நூல் கொள்முதலில் 3 ஆண்டுகளாக முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறை

கோப்புப் படம்: மின்னம்பலம்

23 Nov 2026 - 6:35 pm

2 mins read

சென்னை: தமிழக நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் கடந்த மூன்று ஆண்டுகளாக முறைகேடு நடந்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. இதில் மேலும் இரு பதிப்பகங்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.

கோவை பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் இ.பரந்தாமன் வழக்குத் தொடர்ந்திருந்தார். ‘அகல் விளக்கு’, ‘ஃபீனிக்ஸ்’ பதிப்பகங்களிலிருந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட நூல்கள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்றும் தமது புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

அவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், பெரியார் அறிவுலகம் மட்டுமின்றித் தமிழகம் முழுதும் உள்ள நூலகங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக இத்தகைய முறைகேடு நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தற்போது அத்தகைய நூல்கள் அனைத்தும் நூலகங்களிலிருந்து அகற்றப்பட்டுவிட்டன.

அவ்வழக்கில் ‘சிக்மா’, ‘வித்யா’ ஆகிய மேலும் இரு பதிப்பகங்களுக்குத் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ‘அகல் விளக்கு’ பதிப்பக உரிமையாளர் மோகனைக் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 1.74 கோடி ரூபாய் தொடர்பாக அதன் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் வகுத்த கொள்முதல் கொள்கையைப் பின்பற்றியிருந்தால் இம்முறைகேட்டைத் தவிர்த்திருக்கலாம் எனக் குறிப்பிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை, மனுதாரர் பரந்தாமனின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என உறுதியளித்தது.

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் இந்த முறைகேடு தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் முன்வந்தால், அவர்களுடைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

விசாரணை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்