சென்னை: சென்னை, கேளம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கணவன்-மனைவி மீது தனியார் நிறுவனப் பேருந்து மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மாடம்பாக்கம் ஸ்ரீராம் நகர், நத்தஞ்சேரி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன்(53). மாமல்லபுரம் பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளரான இவர், மாமல்லபுரத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்தார். விடுமுறை நாள்களில் வீட்டிற்குச் சென்று விட்டு திங்கட்கிழமை காலை பணிக்குத் திரும்புவது வழக்கம். வழக்கம் போல் வெள்ளிக்கிழமை மாடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றவர் திங்கட்கிழமை காலை அவரும் அவரது மனைவி ஜெயதுர்கா (47) இருவரும் மாடம்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மாம்பாக்கம் -புதுப்பாக்கம் சாலை அருகே பின்னால் வந்த தனியார் நிறுவனப் பேருந்து மோதியதில் கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
சாலை விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவினர் சாலை விபத்தில் இறந்தவரின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற தனியார் நிறுவனத்தின் பேருந்தை கேளம்பாக்கம் காவல்துறையினர் மடக்கிப் பிடித்ததோடு ஓட்டுநரைக் கைது செய்து பள்ளிக்கரணை போக்குவரத்துப் புலனாய்வு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து தனியார் நிறுவன பேருந்து ஓட்டுநர் கோடீஸ்வரனிடம் (26) விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளரும் அவரது மனைவியும் சாலை விபத்தில் உயிரிழந்தது மாமல்லபுரம் பேரூராட்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.