உண்ட இலையில் அங்கப் பிரதட்சணம் செய்ய நீதிமன்றம் தடைவிதிப்பு

1 mins read
728e7fed-98f5-4f52-838a-3b346f5cbe67
உணவுண்ட இலையில் அங்கப் பிரதட்சணம் செய்வது உடல்நலத்திற்கும் மனித மாண்பிற்கும் உகந்ததன்று என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: தமிழக ஊடகம்

மதுரை: உணவுண்ட இலைமீது அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை தடைவிதித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சதாசிவர் என்ற துறவியின் நினைவுநாளான மே 18ஆம் தேதி, சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்நாளில் பக்தர்கள் உண்ட இலைமீது உருண்டு அங்கப் பிரதட்சணம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

அதனை எதிர்த்து, கடந்த 2014ஆம் ஆண்டு கரூரைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடுத்தார். அதனால், உணவுண்ட இலைமீது உருளும் சடங்கு அடுத்த பத்தாண்டுகளாக நடைபெறவில்லை.

ஆயினும், பாரம்பரியமாக நடத்தப்படும் அச்சடங்கை மீண்டும் நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. அதனை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, அந்தப் புனித நேர்த்திக்கடனை நடத்திக்கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டில் அச்சடங்கு மீண்டும் நடத்தப்பட்டது.

அதனை எதிர்த்து, தமிழக அரசு, அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், உணவுண்ட இலையில் அங்கப் பிரதட்சணம் செய்வது உடல்நலத்திற்கும் மனித மாண்பிற்கும் உகந்ததன்று எனக் குறிப்பிட்டது.

மேலும், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடைவிதித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அத்தகைய நிகழ்வுகளுக்குத் தடைவிதித்து அவர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

குறிப்புச் சொற்கள்