மதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு மீதான விசாரணை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற்றது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015ல் மத்திய அரசு அறிவித்தது. 2018ல் மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
எனினும் இன்னமும் கட்டுமான பணிகள் நடைபெறாமல், நீண்ட காலமாக கிடப்பிலேயே உள்ளது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எனினும், இதுவரை கட்டுமான பணிகள்தொடங்கப்படவில்லை.
எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த பாஸ்கர், தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
விசாரணையின்போது கட்டுமான தாமதத்திற்கான காரணம் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதற்கு, கொரோனா பொதுமுடக்கத்தை மத்திய அரசு காரணம் காட்டிய நிலையில், கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம். அதற்கு முன்பும் பின்பும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் 2026ஆம் ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்று மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விரிவான அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.