சென்னை: வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்தியஞான சபை நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்களை நான்கு வாரங்களுக்குள் இந்து சமய அறநிலையத் துறையிடம் வழங்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்தியஞான சபைக்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பெருவெளியைச் சுற்றிச் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக நிலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரப்பட்டுள்ளதாகவும், அவை இன்னும் கிடைக்கவில்லை என்றும் அறநிலையத் துறை முறையிட்டது.
கடந்த 2024ஆம் ஆண்டிலேயே ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், விவரங்களை வழங்குவதில் ஏன் தாமதம் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நான்கு வாரங்களில் அவ்விவரங்களை அறநிலையத் துறைக்கு வழங்க ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.
விவரங்களைப் பெற்றவுடன் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அழைப்பாண அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
சுற்றுச்சுவர் எழுப்புவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பெருவெளியில் அமைக்கப்பட்டிருந்த வேலி நாசப்படுத்தப்பட்ட வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லாததைச் சுட்டிக்காட்டினர்.
அவ்வழக்கில் கடலூர் காவல் கண்காணிப்பாளரை எதிர்மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள், விசாரணை நிலவரம் குறித்து நவம்பர் 5ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
