சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நூதன தண்டனை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐந்து பேரும் ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்குச் சென்று சேவையாற்ற வேண்டும் என நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தவில்லை எனக் கூறி, பாஜக சார்பில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.
ஐஏஎஸ் அதிகாரிகள் குமார் ஜெயந்த், பிரபாகர், ராஜாராமன், குமாரவேல் பாண்டியன், பாஸ்கர பாண்டியன் ஆகியோர் சார்பில் எழுத்துபூர்வ உறுதிமொழி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவற்றின் உள்ளடக்கங்களைப் பதிவுசெய்துகொண்டார் நீதிபதி பட்டு தேவானந்த். மேலும், அந்த உறுதிமொழியை நிறைவேற்ற இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் வகையில், ஐந்து அதிகாரிகளும் முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று, அங்கு உள்ளவர்களுடன் நேரம் செலவிட நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், தங்கள் தனிப்பட்ட நிதியிலிருந்து அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்படும் என்று ஐந்து அதிகாரிகளும் நீதிமன்றத்தில் உறுதி அளித்தனர்.

