தமிழகத்தில் 20 ஆண்டுகளாக நடந்த புத்தக கொள்முதலை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் 20 ஆண்டுகளாக நடந்த புத்தக கொள்முதலை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

17 Nov 2026 - 4:27 pm

2 mins read

மதுரை: தமிழகத்தில் பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் நடைபெற்ற புத்தகக் கொள்முதல் நடைமுறைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையின்போது, மதுரை கலைஞர் நூலகம், பெரியார் அறிவுலகம் ஆகியவற்றுக்கான சிறப்புப் புத்தகக் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை விதிகள் பின்பற்றப்பட்டதா என நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக, 137 பேர் கொண்ட நிபுணர் குழு பரிந்துரைத்த புத்தகங்கள் எத்தனை, நிராகரிக்கப்பட்டவை எத்தனை என்ற விவரங்களைக் கோரினர்.

மேலும், ‘அகல்விளக்கு’ நிறுவனத்தின் 2,300 புத்தகங்களில் 600 தலைப்புகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 1,700 புத்தகங்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன என்பதற்கான கூட்ட நடவடிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள், இவ்விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் ஐந்து அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் நூலக வரி முறையாக வரவு வைக்கப்பட்டுச் செலவிடப்படுகிறதா என்ற விவரத்தையும் அரசுத் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

முந்தைய ஊழல்களைப் போலன்றி, இம்முறைகேட்டில் செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்க தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், போலிப் பதிப்பாளர்களைக் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றனர்.

மேலும், புத்தகக் கொள்முதலில் இனி முறைகேடுகள் நிகழாதவாறு புதிய அரசு ஆணையை வெளியிடவும் கடந்த 20 ஆண்டுகாலக் கொள்முதல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ தாக்கல் செய்யவும் அறிவுறுத்தி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

‘அகல்விளக்கு’ மோகன் கைது

இதனிடையே, தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, ‘அகல்விளக்கு’ பதிப்பக உரிமையாளர் ஆர்.மோகனை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் கைது செய்தனர்.

நூலகத்துறை அதிகாரிகளுடன் இணைந்து அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன், பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தார் கூட்டுச்சதியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது.

அதையடுத்து, காவல்துறையினர் மோகனைக் கைது செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்